Saturday, August 19, 2017

தரமணி - எனது பார்வையில்

திரு ராம் அவர்களுக்கு,

வணக்கம். காலையில் பார்த்த தரமணி என்னை முழுவதும் ஆக்ரமித்து இருக்கும் நிலையில் இதை எழுதுகிறேன். ஒரு நல்ல படைப்பு ஏதோ ஒரு வகையில் நம்மை பாதிக்க வேண்டும் சிந்திக்க வைக்க வேண்டும். அந்த வகையில் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் உங்கள் குழுவிற்கு தரமணி போன்ற நல்ல படைப்பிற்கு.பெண்ணியம் பேசுகிறேன் என்று பல படங்கள் இது வரை வந்து இருக்கிறது அவற்றில் பெரும்பாலும் பெண்கள் செய்வது அனைத்தும் சரி ஆண்கள் செய்வது அனைத்துமே குற்றம். ஆண்கள் நல்லவர்களே இல்லை என்பது போலவே இருக்கும். தரமணி ட்ரைலர் பார்த்து ஏன்  ராம் கூட அந்த பாதையிலேயே செல்கிறார் என்று நினைத்து இந்த படத்திற்கு சென்ற எனக்கு இன்ப அதிர்ச்சி காத்து இருந்தது. மிகவும் நடு  நிலையான எதார்த்தமான கதை/திரைக்கதை. இரு பக்கமும் இருக்கும் நியாய தர்மங்களை எடுத்து காட்டி இருக்கும் படம். பல இடங்களில் நீங்கள் சொல்லி இருப்பதை ஆமோதிக்க முடிகிறது நாங்களும் இந்த வாழ்க்கையை நாள் தோறும் அருகில் இருந்து பார்க்கிறோம் அல்லது சிலவற்றை வாழ்ந்து கடந்து வந்து இருக்கிறோம் என்ற முறையில்.

கற்றது தமிழ் படம் சில இடங்களில் பாதித்தாலும் மொத்தமாக பார்க்கும் போது அந்த கதாநாயகனின் வாழ்க்கை போல் கொஞ்சம் வழி தவறி சென்று விட்ட உணர்வு இருந்தது. தங்களின் தங்கமீன்கள் பெரிதும் கவர்ந்தது. ஆனந்த யாழை மீட்டுகிறாய் கேட்டு, பார்த்து எனக்கும் ஒரு குட்டி தேவதை தான் வேண்டும் என்று ஏங்க வைத்த  படம். ஒரு கலைஞனாக உங்களின் சிந்தனை வளர்ச்சி தெளிவு ஒவ்வொரு  கட்டத்திலும் புலப்படுகிறது. அந்த வகையில் தரமணியில் ஒரு முழுமை தெரிகிறது தங்களின் முதிர்ச்சியான சிந்தனை மூலம்.

இளைய இசைஞானி யுவன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். கொஞ்சம் கூட உறுத்தாத படத்தின் ஓட்டத்திற்கு தீங்கு செய்யாமல் மெருகேற்றும் இசையை கொடுத்ததற்கு.

முத்துக்குமார் அவர்களின் இழப்பு உங்களுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் தான். தனது எழுத்துக்கள் மற்றும் நல்ல சிந்தனையின் மூலம் தன்னம்பிக்கையை வளர்த்த கவிஞரின் இழப்பை அனைவரும் உணர முடிகிறது. இந்த வழிப்போக்கனின் வாழ்விலும் அவர் தந்து சென்ற இளைப்பாறல் எப்போதும் நிலைத்திருக்கும்.special mention to your status updates in the movie. மிகவும் ரசித்தேன். அவற்றில் பல எங்கள் மனதின் குரலே !!!

by the way, flirting இதற்கு இணையான எனக்கு எட்டிய வரையிலான தமிழ் சொல் flirt - சரசமாடு flirting - சரசமாடுதல் :)

நீங்கள், வெற்றி மாறன் போன்றவர்களின் நல்ல படைப்புகளின் மூலம் உங்களின் குரு பாலு மகேந்திரா அவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். கண்டிப்பாக அவருக்கு பெருமை சேர்த்து கொண்டு இருக்கிறீர்கள் என்று சொல்லலாம். மேலும் இது போன்ற நல்ல உன்னதமான படைப்புக்களை தந்து அவருக்கு மேலும் மரியாதை செய்ய வாழ்த்துக்கள்.

இப்படிக்கு
தரமணி என்னுள் தூண்டிய பல சிந்தனைகளை அசை போட்டு கொண்டு இருக்கும் ஒரு எதார்த்த சினிமா ரசிகன்

Friday, July 22, 2016

கபாலி என் பார்வையில்

கபாலி என் பார்வையில் 

முதலில் ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்  சூப்பர் ஸ்டாருக்கென்று கதை செய்யாமல் தன் கதையில் அப்படியே அவரைப்  பொருத்தியதற்கு.ரொம்ப நாள் ஆச்சு இப்படி ஒரு acting scope உள்ள கதையில் ரஜினியை பார்த்து. படத்தின் கதை ஒடுக்கப்பட்ட இனத்துக்காக போராட தலை தூக்கும் ஒரு தலைவன் (இங்கே மலேசியா டான்), அவரின் நட்பு, துரோகம், எதிர்ப்பு, அதனால் அவன் குடும்பத்தில் அவனுக்கு ஏற்படும் பாதிப்புகள் இவை தான்.வழக்கமான ரஞ்சித் படங்கள் போல இதிலும் அனைத்து கதாபாத்திரத்திற்கும்  முக்கியத்துவம் கொடுத்து கதையை நகர்த்தி உள்ளார். படத்தில் எல்லாருக்கும் ஸ்கோப் மற்றும்  ஸ்கோர் செய்யும் வாய்ப்பு  வெவ்வேறு விதத்தில். மூன்று கதாநாயகிகளும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். ராதிகா ஆப்தே குமுதவல்லி பாத்திரத்தில் கன  கச்சிதம் என்றால் தன்ஷிகா இண்டெர்வல் பிளாக் சீன் சரவெடி. ரித்விகா படத்திற்கு படம் ஒரு படி மேலே போகிறார் இயற்கையான நடிப்பில். அப்புறம் அட்டகத்தி தினேஷ் செய்கைக்கு ஒவ்வொரு சீனிலும் தியேட்டர்  அதிருது. அவர் நிஜ வாழ்க்கையில் கூட இப்படி தான் துரு துருவென்று இருப்பார் என்று யாரோ பேட்டியில் சொல்லியதாக  ஞாபகம். அப்படியே கலை அரசன், ஜான் விஜய் character என சொல்லிக்கொண்டே போகலாம். அனைத்தும் perfect casting and execution.

படத்தின் சில முக்கிய செண்டிமெண்ட் காட்சிகளில் தலைவரின் நடிப்பு, மேனெரிசம், face expression பற்றி சொல்லியே ஆக வேண்டும்.. சான்சே இல்ல... என்னா மாதிரி நடிகன்யா இவரு..சில பழைய படங்களில் சில காட்சிகளில் இவர் கண் போதும், அதுவே பல கதைகள் பேசும். (உதாரணம் : தர்மதுரை). அந்த மாதிரி ஒரு ரஜினி திரும்ப வந்துட்டார்னு  சொல்லி கபாலி ல மறுபடியும் கூட்டிட்டு வந்துட்டார் ரஞ்சித். interval block முன் ஜான் விஜய் கபாலி கதையை சொல்லி முடித்த பின் கண்ணாடியைப் பார்த்து நின்று கொண்டிருக்கும் தலைவர், திரும்பி ஒரு நடை நடந்து விட்டு மகிழ்ச்சி என்று சொல்லும் காட்சி, அதே போல் மாய நதி இங்கு பாடல் முன்பு வரும் சில காட்சிகள் ரஜினி எனும் அற்புதமான கலைஞனை கண் முன்னே நிறுத்துகிறது.

வழக்கமான ரஜினி படத்தில் ஹீரோ வில்லன் கெமிஸ்ட்ரி பக்காவாக இருக்கும் உதாரணம் Baasha. ஆனால் இந்த படத்தில் என்னவோ அதைக் காட்டிலும் கபாலி குடும்ப கெமிஸ்ட்ரி அற்புதம். அது தான் ரஞ்சித் தேடி கொண்டு இருந்த இந்த ஸ்கிரிப்ட்டின் உயிர் நாடி என்று நினைக்கிறேன். திரையில் வரும் இந்த காட்சிகளில் தான் ரஜினி என்னும் அற்புதமான நடிகனை அணு அணுவாக ரசித்தேன். இந்த காட்சிகளில் பல பேர் கண்களில் பார்க்க முடிந்த ஆனந்த கண்ணீரே அதற்கு சாட்சி. இதை மறுப்பவர்கள் படம் பார்க்கும் போது கொஞ்சம் சுற்றி முற்றி பக்கத்தில் இருப்பவர்களை பாருங்கள். (குறிப்பு : இது தியேட்டரில் படம் பார்ப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும், திருட்டு vcd, அப்புறம் மொபைலில் எடுத்து நெட்டில் வெளியிடும் பிரிண்ட் பார்க்கும் திருடர்களுக்கு அல்ல)

படத்தில் குறிப்பிடும் படியான இன்னொன்று வசனம். ரொம்ப சிம்பிள் ஆன "மகிழ்ச்சி" ஆகட்டும் இல்ல புத்திசாலித்தனமான இது போன்ற வசனம் ஆகட்டும்

"என்ன கோட்டுக்கே எல்லாத்தையும் செலவு பண்ணுவ போல" என்று கேட்கும் நண்பனுக்கு    "காந்தி சட்டை போடாததுக்கும், அம்பேத்கர் கோட் போட்டதும் பின்னாடி நெறைய காரணம் இருக்கு நண்பா, அது அரசியல்.  இதுவும் ஒரு வகை எதிர்ப்பு தான் "   என்பது. இந்த வசனங்கள் எல்லாம் சூப்பர்ஸ்டார் ரஜினி என்ற மாமனிதனின் வாயில் இருந்து வரும் போது  இன்னும் பலம் பெறுகிறது. இது இப்படி என்றால் கபாலி குமுதவல்லி இடையில் பேசும் வசனங்கள் ரசிக்கும் படி உள்ள எதார்த்தம் மிக்கவை.


சந்தோஷ் நாராயணின் BGM படத்திற்கு பெரும் பலம். குமுதவல்லி காட்சிகளில் வரும் voilin மற்றும் மாய நதி இங்கே பாடல் மனதில் அழுத்தமாக பதிகிறது. பல பாடல்கள் முழுதாக வராமல் இடை இடையில் bgm ஆக வருகிறது. உச்ச கட்ட காட்சிகளில் நெருப்புடா பொறி பறக்கிறது.

மொத்தத்தில் ஒரு வித்தியாசமான தலைவர் படம், ஒரு பாஷா இல்லை வழக்கமான ரஜினி படம் இதை எதிர்பார்க்காமல் சென்றால்கு டும்பத்துடன் மனம் மகிழ்ந்து நெகிழ்ந்து பார்க்க கூடிய படம் தந்த கபாலி குழுவிற்கு வாழ்த்துக்கள். என்ன கொஞ்சம் பொறுமை வேண்டும் ரசித்து  பார்க்க . ஏன் என்றால் படத்தின் ஆரம்பம் கொஞ்சம் மெதுவாக செல்கிறது. அது தலைவர் intro, song, fight என ஆரம்பித்து கதைக்குள் செல்லும் வரை தான். அதன் பின்பு gripping screenplay நம்மை கதையுடனும் காரெக்டருடனும் நம்மை ஒன்றை செய்கிறது. ஆரம்பத்தில் சில காட்சிகள், கடைசி சண்டை காட்சியில் அப்புறம் இடை இடையில் கொஞ்சம் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு தேவையான காட்சிகள் சேர்க்கப்பட்டாலும் தன் மூலக் கதையில் என்ன தான் சூப்பர் ஸ்டாரை வைத்து படம் செய்தாலும் கொஞ்சம் கூட compromise செய்யாமல் இருந்த ரஞ்சித்தின் உண்மைக்கும் தைரியத்திற்கும் கிடைத்த மகுடம் தான் இந்த கபாலி. பாலச்சந்தர் அவர்கள் எடுத்த பேட்டியில் ரஜினி அவர்கள் சொன்னது "தனக்கு வெறும் commercial படங்களை விட  மனதுக்கு பிடித்த நல்ல கதைகளில் நடிக்க ஆசை என்று." அந்த ஆசையை நிறைவேற்றியிருக்கும் ஒரு படமாக இந்த கபாலி இருக்கும்.


மற்றபடி ரஜினியை குறை கூறியே பிழைக்கும் சிலர் சொல்வது படத்தில் வழக்கமான ரஜினி பட commercial மசாலா இல்லை. ஏன்டா அவர் அப்படி படம் கொடுத்தால் , நல்ல படம் கொடுக்கவில்லை என்று சொல்கிறீர்கள். அவர் நல்ல படம் ஒன்றை கொடுத்தால் இப்படி சொல்லுங்கள்.

உங்களை மாதிரி ஆளுங்களுக்கு தான் படத்தில் தலைவர் சொல்லும் நண்டு கதை பொருந்தும். மற்றபடி உங்களுக்கு இந்த படம் பார்த்து ரசித்த நல்ல பட ரசிகர்கள் மற்றும் உண்மையான  தலைவர் ரசிகர்களின் பதில் " நாங்க நல்ல இருந்தா  உங்களுக்கு பிடிக்காதே ! நாங்க அப்படி தான்டானு  காலார  தூக்கி விட்டு, கால் மேல கால் போட்டு கிட்டு, கெத்தா இருப்போம்  உங்களால தாங்கிக்க முடியலேன்னா சாவுங்கடா "

Sunday, December 21, 2014

லிங்கா விமர்சனம் - என் பார்வையில்

லிங்கா விமர்சனம் - என் பார்வையில்

சூப்பர் ஸ்டார் படம் வந்தாலும் வந்தது அவரவர் தன் வஞ்சத்தை விமர்சனம் என்ற பெயரில் கொட்டி தீர்த்து விட்டனர்.

சரி அப்படி செய்யப்பட்ட விமர்சனங்கள் பற்றி ஒரு கருத்து பதிவு தான் இது.

இவர்கள் படத்தின் அருமையான கதையை விட்டு விட்டார்கள். படத்தில் உள்ள நல்ல கருத்தை விட்டு விட்டார்கள். ராஜா லிங்கேஸ்வரன் கதா பாத்திரத்தை கம்பீரமாக ஏற்று நடித்த ரஜினியின் நடிப்பை விட்டு விட்டனர். முதல் பாதியில் ரசித்து சிரித்த நகைச்சுவையையும் எப்போது ஆரம்பித்தது எப்போது முடிந்தது என்றே தெரியாத முதல் பாதியின் வேகமான ரவிகுமாரின் திரைகதையை விட்டு விட்டார்கள்.தேசப்பற்றுடன் அமைந்த அந்த அருமையான flashback மற்றும் அதில் இருந்த வாழ்க்கையை உணர்த்தும் நல்ல வசனங்களை விட்டு விட்டார்கள்.லிங்கேஸ்வரன் introduction ஆகும் அந்த மெய் சிலிர்க்கும் train சண்டையை முழுதும் மறந்து விட்டார்கள். இக்கால ரஜினி introduce ஆகும் நாம் இது வரை பார்த்திடாத stylish and class superstar introduction song பற்றி பேசாமல் விட்டு விட்டார்கள்.ரெண்டு கதாநாயகிக்கும் சமமாக கொடுத்த நல்ல கதாபாத்திர அமைப்பை பற்றி பேசாமல் விட்டு விட்டார்கள்.

நாட்டு பற்றை தூண்டிய இந்தியனே வா பாடல் பற்றி மறந்து விட்டார்கள். மோனா பாடலில் இன்னும் ஒரு இளைஞன்  போல துரு துருவென வேகத்துடன் இருக்கும் ரஜினியை அறவே மறந்து விட்டார்கள்.

இதை எல்லாம் விட்டு விட்டு கிட்ட தட்ட படமே முடிந்து விட்ட நிலையில் வரும் அந்த climax balloon fight பற்றி மட்டும் குறை கூறும் இந்த கும்பலை என்னென்று சொல்வது.  இப்போது திரை அரங்கில் பார்த்த போது கூட இவர்கள் கூறும் அந்தஅந்த சண்டை காட்சிக்கு பெரிய வரவேற்பு இருந்தது. இவர்கள் இப்படி என்றால் இன்னும் ஒரு பேரறிவாளி "the Hindu" நாளிதழில் விமர்சனம் எழுதுகிறார் இதற்கு எதிர் மாறாக. லிங்கா படம் முழுவதும் ஒன்றுமே இல்லை ஆனால் அந்த இறுதி சண்டை காட்சி  தான் ரஜினி படம் பார்த்த திருப்தியை கொடுக்கிறது என்று. ஆக இந்த அதி புத்திசாலிகளின் கருத்துக்களை சேர்த்து பார்த்தால் கூட லிங்கா படத்தில் ஒவ்வொரு சாராருக்கும் பிடித்த விஷயங்கள் இருப்பதாகத் தானே அர்த்தம் ?

அந்த சண்டை காட்சி ரசிகர்களுக்காகவும் குழந்தைகளை கவரும் வைக்க பட்டது . அதில் கூட எங்கிருந்தோ balloon இல் குதிப்பது போல எடுக்க வில்லையே . மலையின் உச்சிக்கு சென்று அதில் இருந்து குதிப்பது  போல தானே உள்ளது. இதில் குறை கூற என்ன உள்ளது. இதை தான் KSR அவர்களும் அவர்கள் புத்திக்கு உரைக்குமாறு கூறி இருந்தார்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்சியை லிங்கா பட காட்சியுடன் compare செய்து பார்த்தால் தெரியும் நான் சொல்வது என்ன என்று . இத்தனைக்கும் லிங்கா இவ்வளவு பிரம்மாண்டமாக மிக குறைந்த நாட்களில் முடிந்த அளவு சிக்கனமாக எடுக்கப்பட்ட படம் ஆனால் இந்த படத்திற்கு அவ்வளவு செலவு (வெட்டி) வேறு .மேலும் ஒரு காட்சி இன்னொரு படத்தில் எங்கோ இருந்து சம்பந்தமே இல்லாத இடத்தில் குதிப்பார் அந்த அடுத்த superstar ஆசை கொண்ட அதற்கான தகுதியே இல்லாத ஒருவர். அந்த கட்சிக்கான லிங்க் கொடுக்கக்கூட விரும்பவில்லை.ஒருவர் சொல்கிறார் படத்தில்  flashback சென்று விட்டு திரும்ப வர நேரமாகி விட்டது என்று. படத்தின் உயிர் நாடியே அது தான் அதை விட்டு விட்டு படத்தில் நிகழ் காலத்தில் நடப்பதை நீளமாக வைத்து இருந்தால் படத்தில் கதையே இல்லை என்று கூவி இருப்பார்கள்.

இது பத்தாது  என்று distributors என்ற பெயரில் பொய் பிரச்சாரம் வேறு. அதற்கான பதிலையும் KS ரவிக்குமார் அவர்களே தெளிவாக கூறி விட்டார்.

https://www.youtube.com/watch?v=ftvPW18Kfgs&app=desktop

 
மொத்தத்தில் இவர்களின் நோக்கம் லிங்கா படம் பற்றி பேசுவதாக தெரிய வில்லை. ரஜினி என்ற மாமனிதரை முடிந்த வரை ஒழித்து கட்ட வேண்டும் அவர் சூப்பர் ஸ்டார் இல்லை வேறு ஒருவர் தான் என்று பொய்யான அரை கூவல் விட வேண்டும். ஆனால் மக்கள் சக்தியுடன் ஆண்டவனின் ஆசியும் இருக்கும் அந்த நல்ல மனிதரை இவர்களின் இந்த கேடு கேட்ட எண்ணத்தால் ஒன்றும் செய்து விட முடியாது என்பதை காலம் மறுபடியும் உணர்த்தும் என்பதில் ஐயமில்லை. குடும்பம் குடும்பமாக திரை அரங்கில் ரசிக்கும் மக்களே சாட்சி.படத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு காட்சி :

British வில்லன் to ரஜினி : நீ கொடுத்த வாக்க காப்பாத்துவியா

ரஜினி : (no dialogue .. will reply only his mannerism and body language) ஹெய்ய்ய்ய்ய்ய்ய்  ஹேய்ய்ய்..... See you  tomorrow (கம்பீரமாக )

வேறு ஒருவர் இதை செய்திருந்தால் சூரி சொல்வதை போல் "இதெல்லாம் நான் சொன்னா சிரிச்சுருவாங்க பா " இது தான் நடந்திருக்கும்.

அந்த கம்பீரம் தான் ரஜினி என்னும் மகா கலைஞனின் திறமை பலம். அதே தொனியில் தான் இந்த முட்டாள்களுக்கு பதில் கூற வேண்டி இருக்கிறது .

பொய் விமர்சகர்கள் : லிங்கா படம் நல்லாவே இல்ல .. அது சரி இல்ல இது சரி இல்ல

நாம் : (no dialogue .. will reply with only his mannerism and body language) ஹெய்ய்ய்ய்ய்ய்ய்  ஹேய்ய்ய்.....I  am going  to See again tomorrow

இந்த கும்பலுக்கு தேவை விளம்பரம் அதை நாமே இவர்களை ஒரு பொருட்டாய் மதித்து கொடுப்பதை விட்டு விட்டு நமக்கு தலைவரின் பிறந்த நாள் பரிசாக லிங்கா டீம் கஷ்டப்பட்டு கொடுத்த சுமார் 3 மணி நேர பொழுது போக்கை குடும்பத்துடன் ரசிப்போம்.


பெருமையுடன்,
ரஜினி ரசிகன்
Sunday, May 6, 2012

சத்யமேவ ஜெயதே - நிஜ ஹீரோ

சத்யமேவ ஜெயதே - நிஜ ஹீரோ 

கோடிகளை கொட்டி கொடுக்கிறேன் என்று சிறு பிள்ளை தனமான கேள்விகளை கேட்டு மக்களை முட்டாளக்கி பணம் சம்பாதிக்கும் தொலைக்காட்சி  நிகழ்ச்சிக்கு மத்தியில், நம்மால் இந்த சமூகத்திற்கு பயனுள்ள விதத்தில்  என்ன செய்ய முடியும் என்று களம் இறங்கியிருக்கிறது  ஒரு குழு. சும்மா நாற்காலியில் உக்கார்ந்து கொண்டு கேள்வி கேட்கிறேன் என்று அலட்டிக்கொண்டு பல கொடிகளை பெற்ற கான் நடிகர் இருக்கும் அதே துறையில் சமூகத்தில் நம் கண் முன்னே அரங்கேறும், நாம் கண்டு கொள்ளாமல் விட்ட அவலங்களை  ஆராய்ந்து  நமக்கு புள்ளி விவரங்களுடன், ஆதாரத்துடன் விளக்கி அதற்கு தீர்வு காண வலி சொல்லும் ஒரு தேடல் தான் இந்த சத்யமேவ ஜெயதே என்ற நிகழ்ச்சி. 


ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும்  கலை 11.00 மணிக்கு அனைவரும் பார்க்கும் வண்ணம் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்கப்பட்டு ஒளிபரப்பாகிறது இந்த நிகழ்ச்சி. (தூர் தர்ஷன் முதற்கொண்டு) 

ஸ்டார் பிளஸ் மற்றும் தூர் தர்ஷன் சேனலில் ஹிந்தியிலும் ஸ்டார் விஜயில் தமிழிலும் காணலாம்.

இப்படி ஒரு  உன்னதமான முயற்சியில் இறங்கியிருக்கும் ஆமிர் கானுக்கும் அவரது டீமுக்கும் முதலில்   HATS OFF.  

முதல் வாரமான இன்று இந்த நிகழ்ச்சியின் நோக்கத்தை விளக்கிய ஆமிர் கான் பிறகு எடுத்து கொண்ட தலைப்பு பெண் சிசு கொலை . நம் நாட்டில் நடந்து கொண்டு இருக்கும் நினைத்து பார்க்க முடியாத கொடுரங்களைசில கொடூரங்களை எடுத்து காட்டியவர் சில அதிர்ச்சி தகவல்களை தந்தார். உதாரணத்திற்கு  பெண் சிசு கொலை எல்லாம் கிராமத்தில் தான் நடக்கும் என்று நினைத்த என் போன்ற பலருக்கு தந்த அதிர்ச்சி தகவல். படித்த சில முட்டாள்கள் தான் இது  போன்ற அற்ப அறிவுடன் ஈனத்தமான காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்பது. இதில் டாக்டர், IAS அதிகாரிகள் கூட இருக்கின்றனர் என்பது தான் வேதனை.

 இது  என்ன பெரிய செயல் ? ஆமிர் காணும் பல கோடிகள் வங்கி கொண்ட தான் இந்த நிகழ்ச்சியை செய்கிறார் என்று சொல்பவர்களுக்கு .
அவர் நினைத்தால் சும்மா வந்து ஒரு கேம் ஷோ செய்து விட்டு அதே கோடிகளை பெற்றிருக்க முடியும். இருந்தாலும் ஒரு மனிதனாக அன்றாடம் நாம் பார்க்கும் சில சமுக அவலங்களை பல இடங்களுக்கு சென்று பல்வேறு  மனிதர்களை சந்தித்து சமூக அக்கறையுடன் அவற்றை களைய இவர் தொடங்கியுள்ள ஒரு முயற்சி கண்டிப்பாக வரவேற்க வேண்டிய ஒன்றே ஆகும் . 13 வார நிகழ்ச்சியை தயாரிக்க இவர்கள் உழைத்த நேரம் கிட்டத்தட்ட இரண்டு வருடம்.

அரசியல்வாதிகள் பணம் பதுக்கும் சுயநலவாதிகளாக மட்டுமே ஆகி விட்ட இந்த காலத்தில் , அவர்கள் செய்ய வேண்டிய ஒரு காரியத்தை துணிந்து ஆரம்பித்த ஆமிர் கான் என் நெஞ்சில் சிம்மாசனமிட்டு ஒரு உயர்ந்த இடத்தில் அமர்ந்து விட்டார் ஒரு நிஜ ஹீரோவாக.

இவர்களின் இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பார்க்க தவறிய நண்பர்களுக்காக இந்த வார நிகழ்ச்சி:

ஹிந்தி Version தமிழ் Version 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=R9RVyV93JSw
 

Saturday, March 10, 2012

Mr நோக்கியா - எனது பார்வையில்

Mr நோக்கியா

superstar ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் தெலுங்கு நடிகருமான மோகன் பாபுவின் மகன் manchu மனோஜ், Kriti Kharbanda , சனா கான் நடிப்பில் வந்திருக்கும் படம் Mr .Nokia (கடைசி நேரத்தில் சில காரணங்களுக்காக Mr Nookaya என பெயர் மாற்றி ரிலீஸ் செய்துள்ளனர்).படத்தின் ஹீரோ மனோஜ் மீது எனக்கு பெரிய ஈடுபாடு ஏதும் இல்லாததால் நண்பன் அழைத்தும் ஹோலி அன்று ஏனோ இந்த படத்திற்கு போக விருப்பம் இல்லை. ஆனாலும் படத்தின் கதை கொஞ்சம் தெரிந்ததும், மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஏற்கனவே தமிழில் ஹிட் ஆன பாடல்கள் இருந்ததாலும் இன்று சென்றேன்.

பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் சென்ற எனக்கு ஒரு நல்ல அனுபவம் காத்திருந்தது இந்த படம் மூலம்.

திருமணம் முடிந்து இரண்டு நாளில் வேலைக்காக வெளியூர் செல்லும் Kriti Kharband கணவன் கடத்தபடுகிறார் இரண்டு கோடி பணத்திற்காக. மொபைல் போன் திருடும் சாதாராண திருடன் மனோஜ் மற்றும் அவரின் காதலியாக பாரில் வேலை செய்யும் சனா கான். இந்த காதலுக்கும் அந்த கடத்தலுக்கும் ஏற்படும் சம்பந்தம் தான் கதை. இப்படி கேட்கும் போது மிக சாதாரணமாக இருக்கும் ஒரு கதை தான். ஆனால் screenplay அசத்தியுள்ளனர்.

முதல் பாதியில் சில நார்மல் மசாலா காட்சிகள் இருந்தாலும் இரண்டாம் பாதி அழுத்தமாகவும் மிக அழகாகவும் தந்துள்ளனர்.  manchu மனோஜ் படம் இதற்கு முன்பு நான் பார்த்தது ஒரே படம் தான். அது தமிழ் வனம் படத்தின் ஒரிஜினல் ஆன தெலுகு "வேதம்". அவர் அதில் செய்த கதாபாத்திரம் தான் தமிழில் பரத் செய்தது. அந்த படத்தில் கூட அல்லு அர்ஜுன் தான் என்னை மிகவும் கவர்ந்தார்(தமிழில் சிம்பு செய்த role). ஆனால் இந்த படத்தின் மூலம் வித்தியாசமான சில கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் பட்சத்தில் ஒரு நல்ல இடத்தை பிடித்து விட்டார் மனோஜ். இனி இவர் படம் என்றால் கொஞ்சம் consider செய்யலாம் என்ற அளவிற்கு.

இந்த படத்தில் முக்கியமாக குறிப்பிட வேண்டிய அம்சமான stunts choreograph செய்திருப்பது சாட்சாத் இவரே என்பது மேலும் ஆச்சர்யம். மிக இயல்பாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கும் chasing காட்சிகளில் இவரின் உழைப்பு அபாரம்.

சனா கான் படத்தின் glamour quotient அவ்வளவு தான். ஆனால் Kriti Kharband பல காட்சிகளில் பளிச். தமிழில் கூட நிறைய வாய்ப்புகள் வரும் இவருக்கு. homely look + இயல்பான நடிப்பு. இரண்டு கட்சிகளில் வரும் பிரம்மானந்தம் பெரிய அளவில் வேலை இல்லை என்றாலும் வழக்கம் போல தன் பாணியில் காமெடி செய்து விட்டு செல்கிறார்.ஆனாலும் ஓரிரு காட்சி என்றாலும் இவர் வந்தாலே மொத்த திரை அரங்கும் அல்லோல படுகிறது.

முதல் பாதியில் மற்றும் சில fight sequence heroism காட்சிகள் சலிப்பை தந்தாலும், கதைக்குள் நுழைந்ததும் ஜெட் வேகத்தில் பயணிக்கிறது திரைகதை. முதல் காட்சியில் ஆரம்பிக்கும் interest கடைசி காட்சி வரை maintain செய்து இருப்பது பலம்.

புதுபேட்டை படத்தை பார்த்த போது யுவனின் one of the best song "ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது" படத்தில் இல்லாததால் அடைந்த பெரிய ஏமாற்றம் இந்த படத்தில் கொஞ்சம் மறைந்து விட்டது. என்ன தான் யுவன் குரலில் இருந்த மயக்கம் ஹரி சரண் பாடியிருக்கும் இந்த தெலுங்கு வெர்சனில் கொஞ்சம் மிஸ் ஆனாலும், இந்த பாடல் படத்தில் வரும் இடம் கன கச்சிதம் மேலும் படமாக்கியிருக்கும் விதம் இனிமை.

யுவன் புண்ணியத்தில் அனைத்து பாடல்களும் தெலுங்கிலும் ஹிட். மேலும் இந்த படத்தின் காட்சிக்கு கூட சரியான fit . ஆனால் பின்னணி இசை பல இடங்களில் தேவை இல்லாத இரைச்சல்.

சில வழக்கமான மசாலா காட்சிகளை தவிர்த்து பார்த்தால் இது ஒரு நல்ல முயற்சி. மொத்தத்தில்  ஒரு நல்ல feel  good action thriller பார்க்க விரும்புபவர்கள் கண்டிப்பாக செல்லலாம்.

வித்தியாசாமான இன்னும் பல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க manchu மனோஜிற்கு வாழ்த்துக்கள்.

Saturday, February 11, 2012

தோனி - எனது பார்வையில்


தரமான படங்களை தயாரித்து நமக்கு வழங்கிய பிரகாஷ் ராஜின் டூயட் மூவீஸ் தயாரிப்பில் அவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம். மேலும் இசைஞானி இளையராஜா அவர்கள் தனது பழைய பாணியில் live orchestration மூலம் இசை அமைத்து இசை ஜாலம் செய்திருக்கும் படம். 

பெற்றவர்கள் தனது கனவை பிள்ளைகளின் மூலம் நிறைவேற்ற நினைத்து அவர்களின் சொந்த கனவை இலட்சியத்தை பொருட்படுத்தாமல் விட்டு விடுவதை மிக இயல்பாய் சொல்லி இருக்கிறார்கள்.

கிரிக்கெட்டில் பெரிய ஆளாக வர விரும்பும் திறமை மிக்க தனது மகனை நன்றாக படி படி என்று கட்டாயப் படுத்தும் ஒரு சாதாரண middleclass அப்பாவாக பிரகாஷ் ராஜ். விளையாட்டில் இருக்கும் ஆர்வம் துளி கூட படிப்பில் இல்லாத அவரது மகனாக ஒரிஜினல் போக்கிரி பட தெலுங்கு இயக்குனர் பூரி ஜகன் நாத்தின் மகன் ஆகாஷ். மனைவியை இழந்து தனது மகனையும் மகளையும் நன்றாக படிக்க வைக்க போராடும் நாம் அன்றாடம் வாழ்வில் பார்க்கும் ஒரு சாதாரண அரசாங்க ஊழியராக பிரகாஷ் ராஜ் கன கச்சிதம்.எல்லோருக்கும் எல்லாம் தெரிவது இல்லை ஒவ்வொருவர் இடமும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. இதனை உணர்ந்து அந்த துறையில் குழந்தைகளை வளர விட வேண்டியது பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் கடமை என்பதை மிக இயல்பாகவும் கொஞ்சம் நடகதனமாகவும்(படத்தின் இறுதியில் சில காட்சிகள்) சொல்லி இருக்கிறார் இந்த தோனி மூலம்.

பிரகாஷ் ராஜ் அருமையாக நடித்திருக்கிறார் என்று சொல்வது சூரியன் ஒளி தரும் என்று சொல்வதை போல. ஆனால் அவர் இயக்கம் எப்படி என்றால் ஓரளவு ஜெயித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். நமது கலாச்சாரத்திற்கு தேவையான மேலும் சொல்ல பட வேண்டிய கதையை தேர்வு செய்ததற்கு முதலில் வாழ்த்துக்கள். ஆனாலும் முதல் படம் என்பதை சில amateur காட்சிகள் காட்டி கொடுத்து விடுகின்றன. குறிப்பாக இரண்டாவது பாதியில் மற்றும் ராதிகா ஆப்டே கதாபாத்திரத்தில் தெரியும் சில சினிமாத்தனங்கள். அவற்றை தவிர்த்து பார்த்தல் ஒரு நல்ல படைப்பை தந்து இருக்கிறார் என்று தைரியமாக சொல்லலாம்.

படத்தின் பெரிய பலம் சில கதாபாத்திர அமைப்புக்கள், இப்படி ஒரு கதையின் இயல்பைக் கெடுக்காமல் அதோடு நம்மை பயணிக்க வைக்கும் இசைஞானியின் இசை.குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் மகனாக வரும் ஆகாஷ் நல்ல தேர்வு. மேலும் படம் முழுக்க வரும் கஷ்ட காலத்தில் நம்பிக்கை தரும் கதாபாத்திரங்கள்.

தனது மகனின் கனவை புரிந்து கொள்ளாமல் அவனை இழந்து தவிக்கும் லண்டன் டாக்டராக வரும் தலைவாசல் விஜய்  மற்றும் அவர் மனைவி அதே சூழ்நிலையால் தவிக்கும் பிரகாஷ் ராஜ் மகனிற்கு உதவும் காட்சி அமைப்பு மிக எதார்த்தம்.

வட்டிக்கு கடன் கொடுக்கும் பாய் பின்பு பிரகாஷ் ராஜ் மகன் சுய நினைவின்றி இருக்கும் கட்டத்தில் வந்து " நான் ஒரு பைசா விடாமல் வசூல் செய்பவன் தான் ஆனால் அதற்கு கூட சில நேரம் காலம் இருக்கு. இப்படி பட்ட சூழலில் இருக்கும் உன்னிடம் பணம் வசூலிக்கும் அளவிற்கு நான் கேட்டவன் இல்லை" என்று கூறி மகனை வீட்டுக்கு உள்ளேயே வைத்து வருத்த பட்டுக்கொண்டிருக்கும் குடும்பத்தை அவனை வெளியில் அழைத்து செல்லும் படி கூறி நம்பிக்கை தரும் காட்சி.

 மேலும் வார்த்தையால் விவரிக்க முடியாத இந்த காட்சிக்கு தனது இசையால்  வசனம் கொடுத்த இசைஞானி இளையராஜா பாடியிருக்கும் பாடல் " தாவி தாவி போகும் மேகம் பொழியும் நேரம் காயப் பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்".
 
பாடல் வெளியீட்டின் போது பிரகாஷ் ராஜ் கூறிய ஒரு செய்தி: " எனக்கு pain பிடிக்காது ஆனால் இந்த இடத்தில் வரும் பாடலில் வலி இருக்காது  நம்பிக்கை(hope) மட்டுமே இருக்கும்".

இசைஞானியின் இன்னிசையில் அவரது மயக்கும் குரலில் வரும் இந்த பாடல் துவண்டு போகும் நேரத்தில் எல்லாம் அனைவர்க்கும் நம்பிக்கை தரக்கூடிய ஆற்றல் மிக்க இந்த பாடலே அதற்கு சான்று. இந்த படத்தின் பாடல்களில் "the best" என்று சொல்லலாம். குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் நா முத்துகுமாரின் பாடல் வரிகள்.

"விளையாடும் மைதானம் அங்கு பலமாய் கர கோஷம். 
வெறும் பந்தாய் நாம் இருந்தால் பல கால்கள் விளையாடும். 
எந்த காற்று தீண்டும் என்றா குழல் தேடும் 
எந்த காற்று நுழைந்தாலும் குழல் இசை பாடும்.
கடல் அலைகள் நிரந்தரமா அவை ஒவ்வொன்றும் புதிது. 
அதில் குமிழாய் நுரைகளுமாய் வரும் கவலை உடைகிறது
நாம் வாழும் காலத்தில் அட யாரும் தனி இல்லை
உன் தனிமை தன்னை தனிமை ஆக்கும் துணைகள்"

எளிய தமிழில் அழகியல் கெடாமல் அர்த்தமுள்ள பாடல்கள் தருவதில் இவரை நம் தலைமுறை வாலி என்றே சொல்லலாம். வைரமுத்து, வாலி தலைமுறைக்கு பிறகு வந்த பாடலாசிரியர்களில் ஒரு மிக பெரிய இடம் இவருக்கு கண்டிப்பாக உண்டு. இந்த ஆண்டு தமிழ் பட இசைக்கு பொன் ஆண்டாக அமைவதற்கு பல அறிகுறிகள். அவற்றில் ஒன்று தான் மேஸ்ட்ரோ கொடுத்திருக்கும் இந்த தோனி பாடல்கள்.live orchestration மூலம் 80 களில் நாம் ரசித்த காலத்தால் அழியாத பல பாடல்களில் இந்த பாடல்களையும் கண்டிப்பாக சேர்க்கலாம். இளையராஜா அவர்கள் ஒரு இசை கடல் அவரிடம் இயக்குனர் என்ன கேட்கிறார்களோ அது தான் கிடைக்கும் என்பதை அருமையான பாடல்கள் வாங்கி நிருபித்திருக்கிறார் பிரகாஷ் ராஜ்.கூடுதல் மகிழ்ச்சி அடுத்து இந்த இசை மேதையுடன் இணைபவர் gautam menon என்பது.
கனவுக்கும் நடைமுறைக்கும் இடையில் சிக்கி தவிக்கும் மிடில் கிளாஸ் மக்களின் நிலையை அழகாக சொல்லும் "வாங்கும் பணத்துக்கும் வாழ்கைக்குமே ஒரு சம்பந்தம் இல்ல " பாடல் ஆகட்டும், இல்லை பெரிய மனுசி ஆகி இருக்கும் தன் மகளை தந்தை பார்க்கும் பொது வரும் "விளையாட்டா  படகோட்டி விளையாடும் பருவம் பொய் நெசமான ஓடம் போல் நாம் ஆனோம் " ஆகட்டும், அத்தனை அழகு இசையும் அதோடு அழகாக இணைந்திருக்கும் முத்துகுமாரின் பாடல் வரிகளும். 

வாழ்கையின் துன்பம் என்பது என்றுமே தொடர்வது. அதை சமாளித்து நம்பிக்கையுடன் போராடினால் தான் வெற்றி என்பதை இப்படி எழுதியிருக்கிறார் அழகாக. 

"கட்டுமரம் என்றால் என்ன வெட்டு பட்ட மரங்கள் தானே 
கஷ்டப்படும் நீயும் நானும் அது போலே 
பட்ட பாடு அலைகள் போலே விட்டு விட்டு மோதிப் பார்க்கும் 
எட்டி நிற்க திரும்ப திரும்ப விளையாடும்
கடல் இருந்தும் கட்டுமரம் ஆழத்த அறியாது
கரை சேரும் நதி எல்லாம் திரும்பி தான் போகாது. 

 முடிவில்லா முடிவுக்கேது முடிவு"

spb அவர்களின் குரலுக்கு மட்டும் வயசே ஆகாது போல. அதே துள்ளலில் அவர் ஸ்டைலில்  பாடியிருக்கும் "வாங்கும் பணத்துக்கும்" சான்சே இல்லை. அந்த இயல்புக்கு வலு சேர்க்கிறது இது போன்ற மிக இயல்பான வரிகள்.
 "அடுத்த நாளை அடுத்த நாளில் பார்க்கலாம்" 

Trailor பார்த்தாலே படத்தின் கதையை யூகிக்க முடியும் என்பதால் கொஞ்சம் interest குறைவதை தவிர்க்க முடியவில்லை. மேலும் இரண்டாவது பாதியில் வரும் சில காட்சிகளில் மிஸ் ஆகும் இயல்புதனம் இவற்றை தவிர்த்து பார்த்தால் மொத்தத்தில்  இது ஒரு மிக சிறந்த படம் என்று சொல்ல முடியாது என்றாலும் கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு நல்ல படைப்பு என்பதில் சந்தேகம் இல்லை. 

கண்டிப்பாக இன்னும் நல்ல படைப்புக்களை பிரகாஷ் ராஜிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.  Congrats பிரகாஷ் ராஜ் & entire dhoni team.  

விமர்சனம், சினிமா விமர்சனம், சினிமா, இளையராஜா 

Friday, June 17, 2011

அவன் இவன் - எனது பார்வையில்

எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் ஒருவரான பாலாவின் இயக்கத்தில் வந்துள்ள ஒரு multistarrer திரைப்படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றேன். ஆனால் முழு திருப்தி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 
  வழக்கமாக பாலாவின் படத்தில் இருக்கும் ஒரு அழுத்தமான கதை இதில் மிஸ்ஸிங். கதை என்று சொல்லி கொள்ள பெரிதாக இல்லை. சூப்பர் சிங்கர் புகழ் அனந்துவின் இரண்டு மனைவியின் இரண்டு மகன்கள் (விஷால் மற்றும் ஆர்யா) ஊர் ஹைனஸ் gm குமாரின் வளர்ப்பு மகனாக வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்கள் வெளியே எப்போதும் சண்டை போட்டு கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் மிகுந்த பாசத்துடன் இருக்கும் இவர்களின் அன்றாட அட்டகாசம் தான் முதல் பாதி. இவர்கள் வாழ்கையில் ஏற்படும் ஒரு சின்ன திருப்பம் இரண்டாம் பாதி. 

முதல் பாதி போவதே தெரியாமல் ஜாலியாக போகிறது பெரிதாக கதை ஒன்றும் இல்லை என்றாலும். அதிலும் படம் ஆரம்ப கட்டத்தில் சும்மா குத்து குத்து என்று குத்தி எடுத்திருக்கிறார்கள். விசாலின் அறிமுகமே அட்டகாசமான குத்து அடுத்து ஆர்யா தன் பங்கிற்கு தன் அம்மாவுடன் போடும் குத்து என்று ஆரம்பித்து வேகமாக பொழுது போக்காக போகும் முதல் பாதி. இரண்டாம் பாதியில் தான் கதைக்குள் போக போகிறார் என்று பார்த்தால் ஏற்கனவே பார்த்த வழக்கமான பாலா பட கிளைமாக்ஸ்.

ஊர் highness ஆக GM குமாருக்கு தான் படத்தின் முக்கியமான கதாபாத்திரம். முதல் ஒன்றிரண்டு காட்சியிலேயே இவர் கதாபாத்திரம் எப்படி பட்டது என்பதை ஒட்டு மீசை வைத்து விடும் பெண்களிடம் இதை வெளியே சொல்லி விடாதீர்கள் என்பது போன்ற காட்சியின் மூலம் நமக்கு உணர்த்தி விடுகிறார் பாலா. இருந்தாலும் படத்தில் நடக்கும் அத்தனையும் இவரை மையமாகவே வைத்து நகர்வதன் மூலம் இவர் பாத்திரத்தின் பங்கு மிக முக்கியமானதாகி விடுகிறது. அவரும் தன் பங்கிற்கு கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன் படுத்தி விட்டார். காமெடி ஆகட்டும் செண்டிமெண்ட் ஆகட்டும் நல்ல முதிர்ந்த பக்குவமான நடிப்பு. சொல்ல போனால் ஆடுகளம் படத்தில் ஜெயபாலன் (பேட்டைக்காரன்) கதாபாத்திரத்தை போன்ற ஒரு முக்கியமான ரோல்.

இந்த படம் ஒரே ஒரு ஆளுக்கு அடித்த jackpot என்றால் அது விஷால் தான் இவருக்கு இப்படி எல்லாம் கூட நடிக்க தெரியுமா என்று கேட்க தோன்றுகிறது. பிதாமகன், சேது விக்ரம் அளவிற்கு ஒரு கனமான கதாபாத்திரம் இல்லை என்றாலும் விஷால் அட்டகாசபடுத்தி இருக்கிறார். பல காட்சிகளில் அவர் டயலாக் டெலிவரி மற்றும் body language அருமை. முக்கியமாக ஒரு கலைஞனான இவர் இப்போது நவரசத்தை காட்டுவார் என்று அறிமுகம் செய்ததும் அவர் மேடையில் நடித்து காடும் காட்சி பின்னி பெடலெடுத்து விட்டார். சும்மா பத்து பேரை அடித்து விட்டு பஞ்ச் டயலாக் பேசியே பார்த்த விஷாலா இது என்று வியப்பு. சரியான ஆள் கையில் கிடைத்தால் தான் கல் கூட சிற்பமாகும் என்று உணர முடிகிறது. 

 ஆர்யாவிற்கு விஷால் அளவிற்கு நடிக்கும் வாய்ப்பு இல்லை என்றாலும் படும் முழுக்க காமெடியில் கொடி கட்டி பறக்கிறார். வர வர அவரின் காமெடி timing  மற்றும் நடிப்பில் நல்ல spontaneity தெரிவது வரவேற்கத்தக்க முன்னேற்றம். முக்கியமாக இவர் தண்ணி அடித்து விட்டு விசாலின் நடிப்பை பார்த்து வியந்து பாராட்டும் காட்சி அதகளம். தமிழ் பேசும் இரண்டு கதாநாயகிகளை பயன்படுத்தி இருக்கும் பாலாவிற்கு அதற்காக ஒரு சபாஷ். இரண்டு பேரில் ஆர்யாவின் ஜோடியாக வரும் மது ஷாலினி கொஞ்சம் அழகு அதிகம் என்றாலும் வெறும் பொம்மை போல வந்து போகிறார் ஆனால் constable பேபியாக வரும் ஜனனி ஐயருக்கு கொஞ்சம் acting scope இருப்பதால் expressions மூலம் ஸ்கோர் செய்து விடுகிறார். 

சூர்யாவின் அகரம் foundation விழா காட்சியில் ஆர்யாவின் வசனம் மூலம் வரும் சராசரி மனிதனின் comments மற்றும் அதற்கு சூர்யாவின் பதில்கள் bala's touch. சில காட்சியே வந்தாலும் கொடூரத்தின் மையமாக வரும் வில்லன் ஆர் கேவிற்கு பெரிதாக வேலை இல்லை என்றாலும் பாலா மட்டுமே படைக்க கூடிய ஒரு ரோல். 

யுவனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் என்றாலும் முக்கியமான இரண்டு நல்ல பாடல்களை (ஒரு மலை ஓரம் என்ற மெலடி மற்றும் அவன பத்தி நான் பாட போறேன் என்ற குத்து பட்டு )படத்தில் use செய்யாதது ஏமாற்றம்.

படத்தின் கடைசி இருபது நிமிடங்கள் பிதாமகன் படத்தின் காட்சிகளை கொஞ்சம் மாற்றி ரீமேக் செய்தது என்று பாமர ரசிகன் கூட உணர முடியும். வழக்கமாக படத்திற்கு படம் வித்தியாசமான கதைக்களனில் பயணம் செய்து மற்ற இயக்குனர்களில்  இருந்து தனித்து விலகி நிற்கும் பாலா இந்த படத்தில் தனது சுயத்தில் இருந்தே விலகி நிற்பது போன்ற ஒரு உணர்வு. எப்போதும் சந்தோசமான முடிவு என் படத்தில் இருப்பதில்லை என்ற குறை அதிகம் பேர் கூறியதால் அவன் இவன் அப்படி இருக்காது என்று பாலா ஒரு முறை கூறியதாக ஞாபகம். ஆனால் அவரே நினைத்தால் கூட அதை மாற்ற முடியாது என்று நினைக்கிறேன். என்ன இந்த படத்தில் heroes சாக வில்லை ஆனால் முக்கிய கதாபாத்திரத்தை கொடூரமாக கொன்று அதே தாக்கத்தை கொண்டு வந்து விட்டார். 

படத்தின் பிளஸ் :
மிக வேகமாக நகரும் முதல் பாதி 
வித்தியாசமான விஷால்  
முதல் பாதி நகைச்சுவை 

குறை :

வழக்கமான பாலாவின் வித்தியாசமான சிந்தனை மற்றும் திரைக்கதை இல்லாமல் எளிதாக யூகிக்க முடியும் வழக்கமான காட்சிகள் .

பிதாமகன் கிளைமாக்ஸ் repeat.

மொத்தத்தில் நேரத்தை செலவு செய்ய விரும்புபவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம். நல்ல timepass. ஆனால் பாலாவின் standards விரும்பி சென்றால் கொஞ்சம் ஏமாற்றம் மிஞ்சும். யானைக்கும் கொஞ்சம் அடி சறுக்கத்தான் செய்யும் போல ...

அவன் இவன் படம் முடியும் போது ஒரே கேள்வி தான் தோன்றுகிறது பாலாவை பற்றி : அவனா இவன் ? 

Saturday, February 12, 2011

பயணம் - எனது பார்வையில்

 பயணம்
  
அழகிய தீயே, மொழி, அபியும் நானும் போன்ற நல்ல படைப்புக்களை தந்த ராதா மோகன் - பிரகாஷ் ராஜ் கூட்டணியின் அடுத்த முயற்சி தான் இந்த பயணம். வழக்கமான ராதா மோகன் படம் என்றால் எந்த மன நிலையில் சென்றாலும் சந்தோசமாக திரும்பலாம். மேலும் குடும்பத்துடன் பார்க்க கூடிய ஒரு தரமான விரசம் இல்லாத ஒரு படமாக இருக்கும்.

தீவிரவாதிகளின் விமானக் கடத்தல், பயணிகள் மீட்கப்பட்டார்களா  இல்லையா அவர்களின் நிலை என்ன என்பது தான் இந்த படத்தின் கதைக்களம் என்றவுடன் ஒரு இறுக்கமான திரைக்கதையாக இருக்கும் என்று நினைத்து சென்றேன். ஆனால் ஏமாற்றம் தான் எனக்கு. இந்த மாதிரி ஒரு கதையில் கூட இவ்வளவு இயல்பான நகைச்சுவையை கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டார் ராதா மோகன். அவர் பாணியில் spontaneous humour கலந்து ஒரு நல்ல  படமாக கொடுத்திருக்கிறார்.

 படத்தின் பெரிய பிளஸ் ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் சரியான தேர்வும் தான் என்று சொல்லலாம். ஒவ்வொரு கதாபாத்திரமும் அழகு. விமான பயணிகலாகட்டும், pilot, தீவிரவாதிகள், NSG கமாண்டோவாக வரும் நாகர்ஜுனா என அனைத்தும் மிக சரியான தேர்வு.

குறிபிடத்தக்க கதாபாத்திரங்கள் :

1.  பிறக்க போகும் தனது பேரனை பார்பதற்காக பயணிக்கும் ஒரு ஐயங்கார் கணவன் மனைவி. இவர்கள் இடையில் நடக்கும் உரையாடல் அனைத்துமே மிகவும் ரசிக்க கூடியவை. நிஜ வாழ்க்கையில் கிடைக்கும் அருமையான யதார்த்த நகைச்சுவை, படம் முழுவதுமே ஆக்கிரமித்துள்ளது ராதா மோகனின் brilliance.

2.  " shining star " ஆக வரும் ப்ரித்விராஜ் மற்றும் அவரின் பக்கத்தில் அமர்ந்து பயணிக்கும் அவரது தீவிர ரசிகராக வருபவரும் செய்யும் காமெடிக்கு அரங்கமே அதிர்கிறது.

3 . கமாண்டோவாக வரும் நாகர்ஜுனா. தெலுங்கில் well established actor இந்த படத்திற்கு என்ன தேவையோ அதை மிக சரியான அளவில் செய்திருக்கிறார். தான் ஒரு director's actor என்பதை இன்னொரு முறை நிரூபித்து விட்டார். நீண்ட நாளுக்கு பிறகு அவர் நடிக்கும் நேரடி தமிழ் படம். But its worth the wait. மனுஷன் அநியாயத்துக்கு ஸ்மார்டா இருக்குறார். அவர் பையன் ஹீரோ ஆயாச்சு ஆனாலும் அவரை விட இவர் தான் இன்னும் smart  தோற்றத்திலும் நடிப்பிலும்.

4. தீவிரவாதியின் தலைவனை போலவே இருக்கும் character artist ரகு character மற்றும் சினிமா இயக்குனராக வரும் பிரம்மி (பிரம்மானந்தம்)  portion மனம் விட்டு  சிரிக்க வைக்கும் ரகம்.

5  சன் டிவி டீலா நோ டீலா program compering செய்யும் அந்த நடிகர் (பெயர் தெரியவில்லை) மற்றும் சனா கான் இடையில் நடக்கும் இயல்பான உரையாடல்கள் அவர்களுக்குள் பூக்கும் அழகான நட்பு. மற்றும் இவர்களுடன்  இருக்கும் retired colonel கதாபாத்திரத்தில் வரும் தலைவாசல் விஜயின் நேர்த்தியான நடிப்பு.சனா கான் சிலம்பாட்டத்தில் எனக்கு என்னவோ பிடிக்கவே இல்லை. இதில் கொஞ்சம் அழகாக கட்டி இருக்கிறார்கள்.  

6 ராதா மோகன் favourite actors
குமரவேல் கதாபாத்திரத்தின் மூலம் டைரக்டர் கூறும் communism கருத்துக்கள்.
பாதிரியார் கதாபாத்திரத்தில் வரும் M S பாஸ்கர் மூலம் கொடுத்திருக்கும் மனித நேய  கருத்துக்கள்.  

7 Air Hostess கதாபாத்திரத்தில் வரும் பூனம் கவுர் ஓரிரு காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார்.

8  படத்திற்கு தேவையான சில இடங்களில் மட்டுமே வந்தாலும்  ஒரு கட்டத்தில் தீவிரவாதிகளை எதிர்த்து ஏதும் செய்ய முடியாமல் தவிக்கும் இயலாமையை வெளிபடுத்தும் காட்சியை சர்வ சாதரணமாக ஊதி தள்ளி இருக்கிறார் பிரகாஷ் ராஜ்.

இன்னும் பல சொல்லி கொண்டே போகலாம் .........

படத்தின் பொருந்தாத அல்லது இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாமே என்று நினைக்க வைப்பவை . தீவிரவாதிகளாக வரும் பசங்க (இனிது இனிது படத்தில் அறிமுகம் செய்த பசங்க தான் ) கொஞ்சம் over acting செய்வது தான்.

தெலுங்கிலும் release செய்வதால் நாகர்ஜுனா image பாதிக்கப்பட கூடாது என்பதற்காக சேர்த்திருக்கும் kashmir தீவிரவாதி தலைவனை கைது செய்யும் காட்சிகள் கொஞ்சம் cinematic.

படத்திற்கு மேலும் பலம் சேர்த்த விஷயம் ஞானவேலின் sharp and intelligent வசனங்கள்.

உதாரணமாக சரியான  முடிவுகளை எடுக்க தெரியாமல் தவறான முடிவுகளையே எடுக்கும் ஒரு ஆபீசரிடம் நாகர்ஜுனா ஒரு காட்சியில் சொல்லும் இந்த வசனத்தை சொல்லலாம். "  You are old but not experienced " . shining star ப்ரித்விராஜ் சினிமாவில் பேசிய பஞ்ச் வசனங்கள் நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் ரகம்.

பிரவீன் மணியின் பிண்ணனி இசை படத்திற்கு பெரிதாய் பலம் சேர்க்க வில்லை என்றாலும் கெடுக்கவில்லை. இவர் miss செய்ததை score செய்திருப்பவர்கள் cinematographer குகன் (முக்கியமாக கடைசி சில நிமிடங்களில் நம்மை படத்துடன் involve செய்ய வைப்பது இவர் தான் ) மற்றும் art director கதிர். படத்தில் வரும் திருப்தி ஏர்போர்ட் என்பதுஇவர்கள் சொல்லி தான் தெரியும். படம் பார்க்கும் போது அப்படி ஒரு உணர்வே இல்லை. 

ஒரே பாடல் அதுவும் டைட்டில் song. அதில் மதன் கார்கியின் வரிகள் அருமை. பயணம் பற்றிய கவிதை என்றே சொல்லலாம். மற்றபடி பாடல்கள் எதுவும் இல்லாமல் ஒரு இரண்டு மணி நேரம் நேரம் போவதே தெரியாமல் மனம் விட்டு சிரித்து மகிழ்ச்சியுடன் திரும்ப விரும்புபவர்கள் இந்த பயணத்தில் பங்கு கொள்ளலாம்.  

மொத்தத்தில் இந்த கூட்டணியுடனான பயணம் நமக்கு ஒரு இனிய பயணம் தான்.

Sunday, November 28, 2010

நந்தலாலா - விமர்சனம்

நந்தலாலா பேரை கேட்கையில் ஒரு வித பரவசம் நம்மை தொற்றிக்கொள்ளும். அதை விட பல மடங்கு பரவசத்துடன் ஈரம் காயாத விழிகளோடு இதை எழுதுகிறேன்.


எவ்வளவு நாள் ஆச்சு இப்படி ஒரு தமிழ் திரைப்படத்தை ரசித்து பார்த்து. முதலில் இந்த படத்தின் குழுவிற்கு ஒரு royal salute.


படத்தின் கதை இது தான். தனது தாயை தேடி பயணம் மேற்கொள்ளும் ஒரு சிறுவனும் அதே காரணத்துடன் பயணிக்கும் ஒரு மனநலம் சரியில்லாத ஒரு மனிதனும் சந்திக்கும் மனிதர்கள் மற்றும் அவர்களின் அனுபவங்கள். அவர்களின் ஒவ்வொரு அனுபவமும் அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அந்த சூழ்நிலையும் தமிழ் சினிமாவிற்கு புதிது. ரசிக்கும் படியாகவும் உள்ளது சினிமாத்தனம் இல்லாமல்.


 ஆனால் திரையில் செதுக்கி இருக்கும் விதம் நமக்கு ஒரு இனிய மறக்க முடியாத அனுபவம். இதற்கு பெரிய தூணாக ஏன் இந்த படத்தையே தூக்கி சுமப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று இசை ஞானி இளையராஜா அவர்களின் இசை இன்னொன்று புது புது கேமரா கோணங்களில் கதையுடன் நம்மையும் பயணிக்க வைக்கும் cinematographer மகேஷ் முத்துசாமி. படத்தில் வரும் பாத்திரங்களுடன் நாமும் சேர்ந்து பயணிப்பது போன்ற ஒரு உணர்வு வருவதற்கு இவரும் ஒரு மிக மிக முக்கிய காரணம். படத்தில் நடித்திருக்கும் இயக்குனர் மிஸ்கின் ஆகட்டும், அல்லது அகி என்ற கதாபாத்திரத்தில் வரும் அந்த சிறுவனாகட்டும் நாம் ஒரு படத்தை பார்க்கிறோம் என்ற நினைப்பே வராத வகையில் அருமையாக செய்துள்ளனர். ஸ்னிக்தாவிற்கு பெரிய அளவில் வேலை இல்லை என்றாலும் நிறைவாகவே செய்திருக்கிறார்.


title card போடும் போது நீரோடையின் ஓசையுடன் ஆரம்பிக்கும் இசைஞானி அவர்களின் இசை ராஜாங்கம் படம் முழுவதும் மட்டும் இல்லாமல் நம் மனது முழுவதும் ஆக்கிரமித்து படத்தின் ஒட்டு மொத்த உணர்வையும் நமக்கு கொடுத்து விடுகிறது என்றால் அது மிகை அல்ல. அந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். திரை அரங்கில் என்னுடன் படம் பார்த்த  பலரது கண்களில் தேம்பிய கண்ணீரே அதற்கு உதாரணம். ஒரு காட்சியில் அல்ல பல இடங்களில்.

"ஒன்னுக்கொன்னு துணை இருக்கும் உலகத்திலே அன்பு ஒன்னு தான் அனாதையா" பாடல் படத்தில் வரும் இடம் மற்றும்  K J ஜேசுதாஸ் அவர்களின் உருக்கும் குரல் கல் நெஞ்சக்காரர்களை கூட கரைத்து விடும்.

" மண்ணில் தானே எல்லைக்கோடுகள் மனதில் கோடு யார் போட்டது ;
  பெற்றால் தானா பிள்ளை பூமியில் எல்லாம் எல்லாம் நம் பார்வையில்"

 இது போன்ற நல்ல கருத்துள்ள பாடலை கேட்கையில்  " உன்னால் முடியும் தம்பி" படத்தின் எனக்கு மிகவும் பிடித்த " அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா " பாடலை போன்ற ஒரு பாடல் இப்போது கூட நமக்கு கிடைக்கிறதே என்ற சந்தோசம் கிடைக்கிறது.

மேலும் " தாலாட்டு கேட்க நானும் " இளையராஜா அவர்களின் குரலில் சோகத்தை நம் நெஞ்சில் சேர்த்து விடுகிறது. அனைத்து பாடல்களை ஏற்கனவே அடிக்கடி கேட்டு விட்டதால் இன்னும் இரண்டு பாடலை கூட சேர்த்து இருக்கலாமே என்று ஒரு சின்ன ஆசை. ஆனால் படத்திற்கு அது தேவை இல்லை என்பது சரியான முடிவு தான்.படத்தின் பல முக்கிய காட்சிகளில் வசனமே உபயோகிக்காமல் இசையின் மூலமே உணர்த்தியிருப்பது மிஸ்கினின் சாமர்த்தியம். இசையை உபயோகித்து இவ்வளவு விசயங்களை செய்ய முடியும் என்றால் அது இளையராஜா அவர்களால் மட்டுமே சாத்தியம் (True Maestro). இவரை போன்றவர்களின் காலத்தில் வாழ்ந்து இவர்  படைப்புக்களை அனுபவிக்கும் அதிர்ஷ்டம் பெற்றவர்கள் நாம் அனைவரும்.


என்னடா படம் விமர்சனம் என்று போட்டு விட்டு இசையை பற்றி மட்டுமே சொல்லி கொண்டு இருக்கிறேன் என்று கேட்பவர்களுக்கு படத்தை பார்த்தால் நான் சொல்வது புரியும். இசை இல்லாத இந்த படத்தை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அது தான் இந்த படத்தின் உயிர் நாடி. இதை மிஸ்கின் கூட சொன்னார் இப்படி " நந்தலாலா என்று இந்த படத்தின் பெயரை எழுதியது அவர் எழுதிய அடுத்த பெயர் இளையராஜா ".

சில இடங்களில் திரைக்கதையில் கொஞ்சம் தொய்வு இருந்தாலும் plus points மிக அதிகமாக இருக்கும் இது போன்ற நல்ல முயற்சியை கண்டிப்பாக வரவேற்க தான் வேண்டும்.

மொத்தத்தில் நந்தலாலா ஒரு திரைப்படம் அல்ல நல்ல இசையுடன் கூடிய ஒரு இனிய அனுபவம்.  DONT MISS IT.டிஸ்கி : திரை அரங்கில் எங்களுடன் படம் பார்க்க வந்த நந்தலாலா படத்தின் associate director கூறிய ஒரு விஷயம் படத்தின் படத்தின் நீளம் கருதி கடைசி 45 நிமிட climax  நீக்கப்பட்டிருக்கிறது. இசைஞானி அவர்களின் மிரட்டலான இசையில் மட்டுமே உருவான அந்த காட்சிகளை நம்மால் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது அவர் கூறிய அந்த வெளி வராத காட்சிகளை பற்றி கேட்டவுடன். ஆனால் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த அந்த காட்சிகளை படத்தின் dvd உடன் சேர்த்து ரிலீஸ் செய்ய திட்ட மிட்டிருக்கின்றனர் தயாரிப்பாளர்கள் என்பது தான் சந்தோசமான செய்தி.


மிஸ்கின் உருட்டி உருட்டி முழிக்கும் காட்சி கண்களிலேயே நிற்கிறது. படம் முடிந்து வெளியே சந்தித்த போது மிஸ்கின்னிடம் இவ்வளவு expression கொடுக்குற கண்ணை ஏன் சார் கண்ணாடி போட்டு மறைக்கிறீங்க என்று சில நண்பர்களும் எங்களுடன் சேர்ந்து சில family உடன் வந்திருந்த சில தாய்மார்களும் கேட்க உடனே மிஸ்கின் கண்ணாடியை கலட்டி விட்டு எங்களுக்கு போஸ் கொடுத்தார்.எங்களை சந்தித்த மிஸ்கின் அவர்களுக்கும் எங்களுடன் சேர்ந்து படம் பார்த்த நந்தலாலா பட குழுவிற்கும்  நன்றியை தெரிவித்து நாங்கள் கூறிய ஒரு விஷயம் இது போன்ற பல நல்ல படைப்புகளை உங்களிடம் எதிர்பார்க்கிறோம் என்று தான் .

Sunday, August 8, 2010

எந்திரன் - இசை எனது பார்வையில்

நீண்ட நாள் கிடந்த தவத்தின் பலன் இதோ ஓரளவு கிடைத்து விட்டது. ஆம் எந்திரன் பாடல்கள் வெளியாகி விட்டதை தான் சொல்கிறேன்.

முதலில் இந்த album நாயகன் oscar winner நமது ரகுமான் இத்தகைய படத்திற்கு தான் ரொம்ப ஏங்கி கிடந்திருக்கிறார் போல. சும்மா புகுந்து விளையாடி இருக்கிறார். என்ன என்ன experimentation பண்ண முடியுமோ அனைத்தையும் perfection உடன் செய்திருக்கிறார். அதன் விளைவு அனைத்து பாடல்களையும் கேட்கும் போது நமக்கு கிடைக்கும் ஒரு புதுமையான அனுபவம் . 

சில பாடல்கள் ரகுமானின் வழக்கமான style பாடல்கள்  தான். அவற்றை பற்றி முதலில் பேசுவோம்.

 காதல் அணுக்கள்

காதல் அணுக்கள்  உடம்பில் எத்தனை neutron electron உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை என்று ஆரம்பிக்கும் ஒரு விஞ்ஞான எண்ணத்துடன் கூடிய duet பாடல். vintage rahman melody. கேட்பதற்கும் அதை விட பார்பதற்கும் மிகவும் இனிமையாக இருக்கிறது(உபயம் : trailor clipping).
 
அரிமா அரிமா

ஹரிஹரன் சாதனா சர்கம் பாடியிருக்கும் ஒரு perfect superstar பாடல்.

 "உன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் உலகம் உலகம் கை தட்டும் நீ உலகம் தாண்டிய உயரம் கொண்டதில் நிலவு நிலவு தலை முட்டும் " என்று உண்மையை கூறி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் இந்த வரிகள் தான் இந்த பாடலின் பெரும் பலம்.

"நான் மனிதன் அல்ல அக்றினையின் அரசன் நான் காமுற்ற கணினி நான் சின்னஞ்சிறுசின் இதயம் தின்னும் சிலிகான் சிங்கம் நான் " 

 என்று வைரமுத்து அவர்கள் ரோபோ ரஜினியின் புகழ் பாடியிருக்கும் பாடல். சிலிகான் சிங்கம் போன்ற வரிகள் வரும் போது ஹரிஹரன் அவர்களின் modulation அருமை.

Boom boom robo da zoom zoom robo da

ஏ ஆர் ரகுமான் வழக்கமாக rap பாட வைக்கும் blaze இல்லாமல் முதல் முறையாக Yogi B உடன் இணைந்திருக்கும் ஒரு rap பாடல். ரோபோ ரஜினியின் BGM என்று நினைக்கிறேன்.

வைரமுத்துவின் வாரிசு மதன் கார்க்கியின் (robotics professor என்று நினைக்கிறேன்) வரிகளில்  அறிவியலும் தெரிகிறது தந்தை பாணியில் ஆய்வும் அறிவும் தெரிகிறது. எழுதுவது superstar ரஜினிக்கு என்பதால் இது போன்ற வரிகளை பாடலில் புகுத்தி இருப்பது அவர் புத்திசாலித்தனம்.

" ஆட்டோ ஆட்டோக்காரா ஏ ஆட்டோமேடிக் காரா கூட்டம் கூட்டம் பாரு உன் ஆட்டோகிராப்புக்கா "


 Chitti Dance Showcase

பூம் பூம் ரோபோ டா பாடலின் இன்னொரு version. trailor பார்த்ததில் இருந்து இந்த பாடலில் இதுவரை பார்த்திடாத நம் superstar dance movements பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

கிளிமாஞ்சாரோ

பா விஜய் எழுதியுள்ள ஒரே பாடல் . முழுக்க முழுக்க ஒரு african tribal song என்று ஷங்கர் சொல்லி இருக்கிறார். மேலும் மிச்சு பிச்சுவில் அருமையான இடங்களில் படமாக்கி இருக்கிறார்கள். கேட்பதற்கு புதுமையாக தான் இருக்கிறது. பார்ப்போம்.


இரும்பிலே ஒரு இருதயம்

முதலில் கேட்ட போது எது ஏதோ pop song போல இருக்கிறதே என்று நினைத்தேன். ஆனால் கேட்க கேட்க சும்மா பத்திக்கிர பாடல் இது. பாடியிருப்பவர் சாட்சாத் ஏ ஆர் ரகுமானே . தனது காந்தர்வ குரல் மூலம் magic செய்திருக்கிறார். அநேகமாக படம் பார்க்கும் போது இது தான் இன்னொரு அதிரடிக்காரன் போல இருக்கும். கார்க்கி அவர்கள் இந்த படத்தில் எழுதியிருக்கும் பாடல்களில் " The best "   

எச்சில் இல்லா எந்தன் முத்தம் சர்ச்சை இன்றி கொள்வாயா
ரத்தம் இல்லா காதல் என்று ஒத்திப் போக சொல்வாயா

உயிரியல் மொழிகளில் எந்திரன் நானடி 
உளவியல் மொழிகளில் இந்திரன் தானடி 

என்பது போன்ற அறிவியல் ஹை கூ கவிதைகள் நம் தமிழ் திரை உலகிற்கு புதிது தான்.

இனி எந்திரனின் ஹைலைட்டிற்கு வருவோம் :

புதிய மனிதா

"Anything that starts well ends well " என்பது போல இந்த album ஆரம்பமே இந்த அதிரடி பாடல் தான். இந்த படத்தின் பாடல்களின் உச்சம் இந்த பாடல் தான்

இது வரை நாம் கேட்டிராத புதுமையான fresh ஆன இசை. ஏ ஆர் ரகுமானின் குரலில் எந்திரனின் உருவாக்கத்தை விளக்கும் பாடல் பின் அவர் மகள் கதிஜா குரலில் வந்து SPB அவர்களின் மயக்கும் குரலில் நுழையும் போதே நாம் இது வரை உணராத ஒரு உணர்வு வந்து விடுகிறது. மேலும் இந்த பாட்டிற்கு பக்க பலம் வைரமுத்து அவர்களின் வைர வரிகள் மற்றும் SPB . இவர்களை தவிர யாராலும் இது போன்ற ஒரு படைப்பை கொடுக்க முடியுமா என்பது சந்தேகமே !!! 


விஞ்ஞானி ரஜினிக்கும் தான் உருவாக்கிய எந்திரனுக்கும் இடையில் உள்ள உறவை வைரமுத்துவை விட எவராலும் இப்படி வர்ணிக்க முடியாது.

ரோபோ ரோபோ பல மொழிகள் கற்றாலும் என் தந்தை மொழி தமிழ் அல்லவா 
ரோபோ ரோபோ பல கண்டம் வென்றாலும் என் கர்த்தாவுக்கு அடிமை அல்லவா ! !

கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும் ; அறிவில் பிறந்தது மறிப்பதே இல்லை 


நான் இன்னொரு நாண்முகனே , நீ என்பவன் என் மகனே ; ஆண் பெற்றவன் ஆண் மகனே ஆம் உன் பெயர் எந்திரனே 

இந்த பாடலை கேட்கும் போது நமக்கே எந்திரனுடன் ஒரு பிணைப்பு ஏற்படுகிறது. ஷங்கர் கூறியதை போல ரகுமான் ஆஸ்காருக்கு 200 % தகுதியானவர் என்பதை இன்னொரு முறை உலகிற்கு நிருபித்திருக்கும் ஒரு பாடல்.


இந்த படத்தின் தன்மையை முழுதும் உணர்ந்து எழுதியிருக்கும் அருமையான வரிகளில்  வைரமுத்து அவர்களின்  உழைப்பு நம்மை வியப்பூட்டுகிறது. 

இந்த படத்தின் பாடல்களை ஒவ்வொரு முறை கேட்கும் போது ஒவ்வொரு பாடல் முதல் இடத்தை பிடிக்கிறது. எந்த பாடல் மிகவும் பிடித்திருக்கிறது என்று அனைவரையும் கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடலை கூறுவதே இதற்கு ஒரு உதாரணம்.

மொத்தத்தில் ஒரு மிகவும் புதிய அனுபவத்தையும் சந்தோசத்தையும் கொடுத்த இந்த எந்திரன் குழுவிற்கு ஒரு royal salute. Superstar கூறியதை போல "Its going to be an experience" எந்திரன் படம் மட்டும் அல்ல பாடல்களும் ஒரு அனுபவம் தான். அதை வார்த்தைகளில் சொல்ல முடியாது நீங்களே உணருங்கள்.

இந்த பாடல்களை பற்றி மாற்றுக் கருத்து கொண்டவர்களுக்கு  நான் பதில் சொல்ல வேண்டியதில்லை உலகமே பதில் சொல்கிறது.

apple itunes report மற்றும் UK , US நாடுகளில் இருந்து கூட வரும் வரவேற்பு.


தமிழ் திரைபடத்தை உலக அளவிற்கு கொண்டு செல்லும் ஷங்கர் மற்றும் அவர் குழுவின் இந்த முயற்சியை இரு கரம் கூப்பி வரவேற்கலாம்.

ஷங்கர், ரகுமான் , வைரமுத்து , ஐஸ் இவற்றை எல்லாம் தாண்டி புது அவதாரம் எடுக்கும் நம் superstar ரஜினிகாந்த். U cant anything bigger than this. Eagerly waiting for the awesome experience on screen.

புதிய மனிதா சீக்கிரம் பூமிக்கு வா !!!!!!!!!!!!!!!!!!!