Sunday, November 28, 2010

நந்தலாலா - விமர்சனம்

நந்தலாலா பேரை கேட்கையில் ஒரு வித பரவசம் நம்மை தொற்றிக்கொள்ளும். அதை விட பல மடங்கு பரவசத்துடன் ஈரம் காயாத விழிகளோடு இதை எழுதுகிறேன்.


எவ்வளவு நாள் ஆச்சு இப்படி ஒரு தமிழ் திரைப்படத்தை ரசித்து பார்த்து. முதலில் இந்த படத்தின் குழுவிற்கு ஒரு royal salute.


படத்தின் கதை இது தான். தனது தாயை தேடி பயணம் மேற்கொள்ளும் ஒரு சிறுவனும் அதே காரணத்துடன் பயணிக்கும் ஒரு மனநலம் சரியில்லாத ஒரு மனிதனும் சந்திக்கும் மனிதர்கள் மற்றும் அவர்களின் அனுபவங்கள். அவர்களின் ஒவ்வொரு அனுபவமும் அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அந்த சூழ்நிலையும் தமிழ் சினிமாவிற்கு புதிது. ரசிக்கும் படியாகவும் உள்ளது சினிமாத்தனம் இல்லாமல்.


 ஆனால் திரையில் செதுக்கி இருக்கும் விதம் நமக்கு ஒரு இனிய மறக்க முடியாத அனுபவம். இதற்கு பெரிய தூணாக ஏன் இந்த படத்தையே தூக்கி சுமப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று இசை ஞானி இளையராஜா அவர்களின் இசை இன்னொன்று புது புது கேமரா கோணங்களில் கதையுடன் நம்மையும் பயணிக்க வைக்கும் cinematographer மகேஷ் முத்துசாமி. படத்தில் வரும் பாத்திரங்களுடன் நாமும் சேர்ந்து பயணிப்பது போன்ற ஒரு உணர்வு வருவதற்கு இவரும் ஒரு மிக மிக முக்கிய காரணம். படத்தில் நடித்திருக்கும் இயக்குனர் மிஸ்கின் ஆகட்டும், அல்லது அகி என்ற கதாபாத்திரத்தில் வரும் அந்த சிறுவனாகட்டும் நாம் ஒரு படத்தை பார்க்கிறோம் என்ற நினைப்பே வராத வகையில் அருமையாக செய்துள்ளனர். ஸ்னிக்தாவிற்கு பெரிய அளவில் வேலை இல்லை என்றாலும் நிறைவாகவே செய்திருக்கிறார்.


title card போடும் போது நீரோடையின் ஓசையுடன் ஆரம்பிக்கும் இசைஞானி அவர்களின் இசை ராஜாங்கம் படம் முழுவதும் மட்டும் இல்லாமல் நம் மனது முழுவதும் ஆக்கிரமித்து படத்தின் ஒட்டு மொத்த உணர்வையும் நமக்கு கொடுத்து விடுகிறது என்றால் அது மிகை அல்ல. அந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். திரை அரங்கில் என்னுடன் படம் பார்த்த  பலரது கண்களில் தேம்பிய கண்ணீரே அதற்கு உதாரணம். ஒரு காட்சியில் அல்ல பல இடங்களில்.

"ஒன்னுக்கொன்னு துணை இருக்கும் உலகத்திலே அன்பு ஒன்னு தான் அனாதையா" பாடல் படத்தில் வரும் இடம் மற்றும்  K J ஜேசுதாஸ் அவர்களின் உருக்கும் குரல் கல் நெஞ்சக்காரர்களை கூட கரைத்து விடும்.

" மண்ணில் தானே எல்லைக்கோடுகள் மனதில் கோடு யார் போட்டது ;
  பெற்றால் தானா பிள்ளை பூமியில் எல்லாம் எல்லாம் நம் பார்வையில்"

 இது போன்ற நல்ல கருத்துள்ள பாடலை கேட்கையில்  " உன்னால் முடியும் தம்பி" படத்தின் எனக்கு மிகவும் பிடித்த " அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா " பாடலை போன்ற ஒரு பாடல் இப்போது கூட நமக்கு கிடைக்கிறதே என்ற சந்தோசம் கிடைக்கிறது.

மேலும் " தாலாட்டு கேட்க நானும் " இளையராஜா அவர்களின் குரலில் சோகத்தை நம் நெஞ்சில் சேர்த்து விடுகிறது. அனைத்து பாடல்களை ஏற்கனவே அடிக்கடி கேட்டு விட்டதால் இன்னும் இரண்டு பாடலை கூட சேர்த்து இருக்கலாமே என்று ஒரு சின்ன ஆசை. ஆனால் படத்திற்கு அது தேவை இல்லை என்பது சரியான முடிவு தான்.



படத்தின் பல முக்கிய காட்சிகளில் வசனமே உபயோகிக்காமல் இசையின் மூலமே உணர்த்தியிருப்பது மிஸ்கினின் சாமர்த்தியம். இசையை உபயோகித்து இவ்வளவு விசயங்களை செய்ய முடியும் என்றால் அது இளையராஜா அவர்களால் மட்டுமே சாத்தியம் (True Maestro). இவரை போன்றவர்களின் காலத்தில் வாழ்ந்து இவர்  படைப்புக்களை அனுபவிக்கும் அதிர்ஷ்டம் பெற்றவர்கள் நாம் அனைவரும்.


என்னடா படம் விமர்சனம் என்று போட்டு விட்டு இசையை பற்றி மட்டுமே சொல்லி கொண்டு இருக்கிறேன் என்று கேட்பவர்களுக்கு படத்தை பார்த்தால் நான் சொல்வது புரியும். இசை இல்லாத இந்த படத்தை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அது தான் இந்த படத்தின் உயிர் நாடி. இதை மிஸ்கின் கூட சொன்னார் இப்படி " நந்தலாலா என்று இந்த படத்தின் பெயரை எழுதியது அவர் எழுதிய அடுத்த பெயர் இளையராஜா ".

சில இடங்களில் திரைக்கதையில் கொஞ்சம் தொய்வு இருந்தாலும் plus points மிக அதிகமாக இருக்கும் இது போன்ற நல்ல முயற்சியை கண்டிப்பாக வரவேற்க தான் வேண்டும்.

மொத்தத்தில் நந்தலாலா ஒரு திரைப்படம் அல்ல நல்ல இசையுடன் கூடிய ஒரு இனிய அனுபவம்.  DONT MISS IT.



டிஸ்கி : திரை அரங்கில் எங்களுடன் படம் பார்க்க வந்த நந்தலாலா படத்தின் associate director கூறிய ஒரு விஷயம் படத்தின் படத்தின் நீளம் கருதி கடைசி 45 நிமிட climax  நீக்கப்பட்டிருக்கிறது. இசைஞானி அவர்களின் மிரட்டலான இசையில் மட்டுமே உருவான அந்த காட்சிகளை நம்மால் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது அவர் கூறிய அந்த வெளி வராத காட்சிகளை பற்றி கேட்டவுடன். ஆனால் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த அந்த காட்சிகளை படத்தின் dvd உடன் சேர்த்து ரிலீஸ் செய்ய திட்ட மிட்டிருக்கின்றனர் தயாரிப்பாளர்கள் என்பது தான் சந்தோசமான செய்தி.


மிஸ்கின் உருட்டி உருட்டி முழிக்கும் காட்சி கண்களிலேயே நிற்கிறது. படம் முடிந்து வெளியே சந்தித்த போது மிஸ்கின்னிடம் இவ்வளவு expression கொடுக்குற கண்ணை ஏன் சார் கண்ணாடி போட்டு மறைக்கிறீங்க என்று சில நண்பர்களும் எங்களுடன் சேர்ந்து சில family உடன் வந்திருந்த சில தாய்மார்களும் கேட்க உடனே மிஸ்கின் கண்ணாடியை கலட்டி விட்டு எங்களுக்கு போஸ் கொடுத்தார்.



எங்களை சந்தித்த மிஸ்கின் அவர்களுக்கும் எங்களுடன் சேர்ந்து படம் பார்த்த நந்தலாலா பட குழுவிற்கும்  நன்றியை தெரிவித்து நாங்கள் கூறிய ஒரு விஷயம் இது போன்ற பல நல்ல படைப்புகளை உங்களிடம் எதிர்பார்க்கிறோம் என்று தான் .

No comments:

Post a Comment

படித்தது பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் தங்கள் கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள இங்கே பதிவு செய்யவும்.என் எழுத்துக்களை நான் மெருகேற்றிக்கொள்ள உதவும்.மேலும் எழுத எனக்கு உற்சாகம் அளிக்கும்.