Saturday, August 19, 2017

தரமணி - எனது பார்வையில்

திரு ராம் அவர்களுக்கு,

வணக்கம். காலையில் பார்த்த தரமணி என்னை முழுவதும் ஆக்ரமித்து இருக்கும் நிலையில் இதை எழுதுகிறேன். ஒரு நல்ல படைப்பு ஏதோ ஒரு வகையில் நம்மை பாதிக்க வேண்டும் சிந்திக்க வைக்க வேண்டும். அந்த வகையில் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் உங்கள் குழுவிற்கு தரமணி போன்ற நல்ல படைப்பிற்கு.



பெண்ணியம் பேசுகிறேன் என்று பல படங்கள் இது வரை வந்து இருக்கிறது அவற்றில் பெரும்பாலும் பெண்கள் செய்வது அனைத்தும் சரி ஆண்கள் செய்வது அனைத்துமே குற்றம். ஆண்கள் நல்லவர்களே இல்லை என்பது போலவே இருக்கும். தரமணி ட்ரைலர் பார்த்து ஏன்  ராம் கூட அந்த பாதையிலேயே செல்கிறார் என்று நினைத்து இந்த படத்திற்கு சென்ற எனக்கு இன்ப அதிர்ச்சி காத்து இருந்தது. மிகவும் நடு  நிலையான எதார்த்தமான கதை/திரைக்கதை. இரு பக்கமும் இருக்கும் நியாய தர்மங்களை எடுத்து காட்டி இருக்கும் படம். பல இடங்களில் நீங்கள் சொல்லி இருப்பதை ஆமோதிக்க முடிகிறது நாங்களும் இந்த வாழ்க்கையை நாள் தோறும் அருகில் இருந்து பார்க்கிறோம் அல்லது சிலவற்றை வாழ்ந்து கடந்து வந்து இருக்கிறோம் என்ற முறையில்.

கற்றது தமிழ் படம் சில இடங்களில் பாதித்தாலும் மொத்தமாக பார்க்கும் போது அந்த கதாநாயகனின் வாழ்க்கை போல் கொஞ்சம் வழி தவறி சென்று விட்ட உணர்வு இருந்தது. தங்களின் தங்கமீன்கள் பெரிதும் கவர்ந்தது. ஆனந்த யாழை மீட்டுகிறாய் கேட்டு, பார்த்து எனக்கும் ஒரு குட்டி தேவதை தான் வேண்டும் என்று ஏங்க வைத்த  படம். ஒரு கலைஞனாக உங்களின் சிந்தனை வளர்ச்சி தெளிவு ஒவ்வொரு  கட்டத்திலும் புலப்படுகிறது. அந்த வகையில் தரமணியில் ஒரு முழுமை தெரிகிறது தங்களின் முதிர்ச்சியான சிந்தனை மூலம்.

இளைய இசைஞானி யுவன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். கொஞ்சம் கூட உறுத்தாத படத்தின் ஓட்டத்திற்கு தீங்கு செய்யாமல் மெருகேற்றும் இசையை கொடுத்ததற்கு.

முத்துக்குமார் அவர்களின் இழப்பு உங்களுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் தான். தனது எழுத்துக்கள் மற்றும் நல்ல சிந்தனையின் மூலம் தன்னம்பிக்கையை வளர்த்த கவிஞரின் இழப்பை அனைவரும் உணர முடிகிறது. இந்த வழிப்போக்கனின் வாழ்விலும் அவர் தந்து சென்ற இளைப்பாறல் எப்போதும் நிலைத்திருக்கும்.



special mention to your status updates in the movie. மிகவும் ரசித்தேன். அவற்றில் பல எங்கள் மனதின் குரலே !!!

by the way, flirting இதற்கு இணையான எனக்கு எட்டிய வரையிலான தமிழ் சொல் flirt - சரசமாடு flirting - சரசமாடுதல் :)

நீங்கள், வெற்றி மாறன் போன்றவர்களின் நல்ல படைப்புகளின் மூலம் உங்களின் குரு பாலு மகேந்திரா அவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். கண்டிப்பாக அவருக்கு பெருமை சேர்த்து கொண்டு இருக்கிறீர்கள் என்று சொல்லலாம். மேலும் இது போன்ற நல்ல உன்னதமான படைப்புக்களை தந்து அவருக்கு மேலும் மரியாதை செய்ய வாழ்த்துக்கள்.

இப்படிக்கு
தரமணி என்னுள் தூண்டிய பல சிந்தனைகளை அசை போட்டு கொண்டு இருக்கும் ஒரு எதார்த்த சினிமா ரசிகன்

No comments:

Post a Comment

படித்தது பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் தங்கள் கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள இங்கே பதிவு செய்யவும்.என் எழுத்துக்களை நான் மெருகேற்றிக்கொள்ள உதவும்.மேலும் எழுத எனக்கு உற்சாகம் அளிக்கும்.