Saturday, February 11, 2012

தோனி - எனது பார்வையில்


தரமான படங்களை தயாரித்து நமக்கு வழங்கிய பிரகாஷ் ராஜின் டூயட் மூவீஸ் தயாரிப்பில் அவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம். மேலும் இசைஞானி இளையராஜா அவர்கள் தனது பழைய பாணியில் live orchestration மூலம் இசை அமைத்து இசை ஜாலம் செய்திருக்கும் படம். 

பெற்றவர்கள் தனது கனவை பிள்ளைகளின் மூலம் நிறைவேற்ற நினைத்து அவர்களின் சொந்த கனவை இலட்சியத்தை பொருட்படுத்தாமல் விட்டு விடுவதை மிக இயல்பாய் சொல்லி இருக்கிறார்கள்.

கிரிக்கெட்டில் பெரிய ஆளாக வர விரும்பும் திறமை மிக்க தனது மகனை நன்றாக படி படி என்று கட்டாயப் படுத்தும் ஒரு சாதாரண middleclass அப்பாவாக பிரகாஷ் ராஜ். விளையாட்டில் இருக்கும் ஆர்வம் துளி கூட படிப்பில் இல்லாத அவரது மகனாக ஒரிஜினல் போக்கிரி பட தெலுங்கு இயக்குனர் பூரி ஜகன் நாத்தின் மகன் ஆகாஷ். மனைவியை இழந்து தனது மகனையும் மகளையும் நன்றாக படிக்க வைக்க போராடும் நாம் அன்றாடம் வாழ்வில் பார்க்கும் ஒரு சாதாரண அரசாங்க ஊழியராக பிரகாஷ் ராஜ் கன கச்சிதம்.எல்லோருக்கும் எல்லாம் தெரிவது இல்லை ஒவ்வொருவர் இடமும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. இதனை உணர்ந்து அந்த துறையில் குழந்தைகளை வளர விட வேண்டியது பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் கடமை என்பதை மிக இயல்பாகவும் கொஞ்சம் நடகதனமாகவும்(படத்தின் இறுதியில் சில காட்சிகள்) சொல்லி இருக்கிறார் இந்த தோனி மூலம்.

பிரகாஷ் ராஜ் அருமையாக நடித்திருக்கிறார் என்று சொல்வது சூரியன் ஒளி தரும் என்று சொல்வதை போல. ஆனால் அவர் இயக்கம் எப்படி என்றால் ஓரளவு ஜெயித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். நமது கலாச்சாரத்திற்கு தேவையான மேலும் சொல்ல பட வேண்டிய கதையை தேர்வு செய்ததற்கு முதலில் வாழ்த்துக்கள். ஆனாலும் முதல் படம் என்பதை சில amateur காட்சிகள் காட்டி கொடுத்து விடுகின்றன. குறிப்பாக இரண்டாவது பாதியில் மற்றும் ராதிகா ஆப்டே கதாபாத்திரத்தில் தெரியும் சில சினிமாத்தனங்கள். அவற்றை தவிர்த்து பார்த்தல் ஒரு நல்ல படைப்பை தந்து இருக்கிறார் என்று தைரியமாக சொல்லலாம்.

படத்தின் பெரிய பலம் சில கதாபாத்திர அமைப்புக்கள், இப்படி ஒரு கதையின் இயல்பைக் கெடுக்காமல் அதோடு நம்மை பயணிக்க வைக்கும் இசைஞானியின் இசை.குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் மகனாக வரும் ஆகாஷ் நல்ல தேர்வு. மேலும் படம் முழுக்க வரும் கஷ்ட காலத்தில் நம்பிக்கை தரும் கதாபாத்திரங்கள்.

தனது மகனின் கனவை புரிந்து கொள்ளாமல் அவனை இழந்து தவிக்கும் லண்டன் டாக்டராக வரும் தலைவாசல் விஜய்  மற்றும் அவர் மனைவி அதே சூழ்நிலையால் தவிக்கும் பிரகாஷ் ராஜ் மகனிற்கு உதவும் காட்சி அமைப்பு மிக எதார்த்தம்.

வட்டிக்கு கடன் கொடுக்கும் பாய் பின்பு பிரகாஷ் ராஜ் மகன் சுய நினைவின்றி இருக்கும் கட்டத்தில் வந்து " நான் ஒரு பைசா விடாமல் வசூல் செய்பவன் தான் ஆனால் அதற்கு கூட சில நேரம் காலம் இருக்கு. இப்படி பட்ட சூழலில் இருக்கும் உன்னிடம் பணம் வசூலிக்கும் அளவிற்கு நான் கேட்டவன் இல்லை" என்று கூறி மகனை வீட்டுக்கு உள்ளேயே வைத்து வருத்த பட்டுக்கொண்டிருக்கும் குடும்பத்தை அவனை வெளியில் அழைத்து செல்லும் படி கூறி நம்பிக்கை தரும் காட்சி.

 மேலும் வார்த்தையால் விவரிக்க முடியாத இந்த காட்சிக்கு தனது இசையால்  வசனம் கொடுத்த இசைஞானி இளையராஜா பாடியிருக்கும் பாடல் " தாவி தாவி போகும் மேகம் பொழியும் நேரம் காயப் பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்".
 
பாடல் வெளியீட்டின் போது பிரகாஷ் ராஜ் கூறிய ஒரு செய்தி: " எனக்கு pain பிடிக்காது ஆனால் இந்த இடத்தில் வரும் பாடலில் வலி இருக்காது  நம்பிக்கை(hope) மட்டுமே இருக்கும்".

இசைஞானியின் இன்னிசையில் அவரது மயக்கும் குரலில் வரும் இந்த பாடல் துவண்டு போகும் நேரத்தில் எல்லாம் அனைவர்க்கும் நம்பிக்கை தரக்கூடிய ஆற்றல் மிக்க இந்த பாடலே அதற்கு சான்று. இந்த படத்தின் பாடல்களில் "the best" என்று சொல்லலாம். குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் நா முத்துகுமாரின் பாடல் வரிகள்.

"விளையாடும் மைதானம் அங்கு பலமாய் கர கோஷம். 
வெறும் பந்தாய் நாம் இருந்தால் பல கால்கள் விளையாடும். 
எந்த காற்று தீண்டும் என்றா குழல் தேடும் 
எந்த காற்று நுழைந்தாலும் குழல் இசை பாடும்.
கடல் அலைகள் நிரந்தரமா அவை ஒவ்வொன்றும் புதிது. 
அதில் குமிழாய் நுரைகளுமாய் வரும் கவலை உடைகிறது
நாம் வாழும் காலத்தில் அட யாரும் தனி இல்லை
உன் தனிமை தன்னை தனிமை ஆக்கும் துணைகள்"

எளிய தமிழில் அழகியல் கெடாமல் அர்த்தமுள்ள பாடல்கள் தருவதில் இவரை நம் தலைமுறை வாலி என்றே சொல்லலாம். வைரமுத்து, வாலி தலைமுறைக்கு பிறகு வந்த பாடலாசிரியர்களில் ஒரு மிக பெரிய இடம் இவருக்கு கண்டிப்பாக உண்டு. இந்த ஆண்டு தமிழ் பட இசைக்கு பொன் ஆண்டாக அமைவதற்கு பல அறிகுறிகள். அவற்றில் ஒன்று தான் மேஸ்ட்ரோ கொடுத்திருக்கும் இந்த தோனி பாடல்கள்.live orchestration மூலம் 80 களில் நாம் ரசித்த காலத்தால் அழியாத பல பாடல்களில் இந்த பாடல்களையும் கண்டிப்பாக சேர்க்கலாம். இளையராஜா அவர்கள் ஒரு இசை கடல் அவரிடம் இயக்குனர் என்ன கேட்கிறார்களோ அது தான் கிடைக்கும் என்பதை அருமையான பாடல்கள் வாங்கி நிருபித்திருக்கிறார் பிரகாஷ் ராஜ்.கூடுதல் மகிழ்ச்சி அடுத்து இந்த இசை மேதையுடன் இணைபவர் gautam menon என்பது.
கனவுக்கும் நடைமுறைக்கும் இடையில் சிக்கி தவிக்கும் மிடில் கிளாஸ் மக்களின் நிலையை அழகாக சொல்லும் "வாங்கும் பணத்துக்கும் வாழ்கைக்குமே ஒரு சம்பந்தம் இல்ல " பாடல் ஆகட்டும், இல்லை பெரிய மனுசி ஆகி இருக்கும் தன் மகளை தந்தை பார்க்கும் பொது வரும் "விளையாட்டா  படகோட்டி விளையாடும் பருவம் பொய் நெசமான ஓடம் போல் நாம் ஆனோம் " ஆகட்டும், அத்தனை அழகு இசையும் அதோடு அழகாக இணைந்திருக்கும் முத்துகுமாரின் பாடல் வரிகளும். 

வாழ்கையின் துன்பம் என்பது என்றுமே தொடர்வது. அதை சமாளித்து நம்பிக்கையுடன் போராடினால் தான் வெற்றி என்பதை இப்படி எழுதியிருக்கிறார் அழகாக. 

"கட்டுமரம் என்றால் என்ன வெட்டு பட்ட மரங்கள் தானே 
கஷ்டப்படும் நீயும் நானும் அது போலே 
பட்ட பாடு அலைகள் போலே விட்டு விட்டு மோதிப் பார்க்கும் 
எட்டி நிற்க திரும்ப திரும்ப விளையாடும்
கடல் இருந்தும் கட்டுமரம் ஆழத்த அறியாது
கரை சேரும் நதி எல்லாம் திரும்பி தான் போகாது. 

 முடிவில்லா முடிவுக்கேது முடிவு"

spb அவர்களின் குரலுக்கு மட்டும் வயசே ஆகாது போல. அதே துள்ளலில் அவர் ஸ்டைலில்  பாடியிருக்கும் "வாங்கும் பணத்துக்கும்" சான்சே இல்லை. அந்த இயல்புக்கு வலு சேர்க்கிறது இது போன்ற மிக இயல்பான வரிகள்.
 "அடுத்த நாளை அடுத்த நாளில் பார்க்கலாம்" 

Trailor பார்த்தாலே படத்தின் கதையை யூகிக்க முடியும் என்பதால் கொஞ்சம் interest குறைவதை தவிர்க்க முடியவில்லை. மேலும் இரண்டாவது பாதியில் வரும் சில காட்சிகளில் மிஸ் ஆகும் இயல்புதனம் இவற்றை தவிர்த்து பார்த்தால் மொத்தத்தில்  இது ஒரு மிக சிறந்த படம் என்று சொல்ல முடியாது என்றாலும் கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு நல்ல படைப்பு என்பதில் சந்தேகம் இல்லை. 

கண்டிப்பாக இன்னும் நல்ல படைப்புக்களை பிரகாஷ் ராஜிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.  Congrats பிரகாஷ் ராஜ் & entire dhoni team.  

விமர்சனம், சினிமா விமர்சனம், சினிமா, இளையராஜா